search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் மனு"

    சனவெளி கோட்டைக்கரை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

    இதில் பாம்பனை சேர்ந்த மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச்சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமையில் மீனவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு செல்ல கடந்த சில ஆண்டுகளாக நாட்டுப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த ஆலயம் நாட்டுப்படகு மீனவர்களால் நேர்ச்சையாக கட்டப்பட்ட காலம் முதல் குடும்பம் குடும்பமாக நாட்டுப்படகு மீனவர்கள் தான் சென்று வழிபட்டு வந்தனர். தற்போது விசைப்படகுகள் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்படும் நிலையில் நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் சென்று வழிபட உரிய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சனவெளி ஏ.ஐ.டி.யு.சி. மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முருகபூபதி, குருசாமி ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவெளி கோட்டைக்கரை ஆற்றுப்படுகையில் கடந்த 15 ஆண்டுகளாக மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி 170-க்கும் மேற்பட்டோர் பிழைத்து வருகின்றனர். இவர்கள் முறையாக அரசின் அனுமதி பெற்று ரசீது பெற்று மணல் அள்ளி வந்தனர்.

    இந்த நிலையில் மணல் அள்ளுவதற்கு 50 நாட்கள் அனுமதி உள்ளதற்கு முன்பாகவே மாட்டு வண்டிகளுக்கு அங்குள்ள அதிகாரி சீட்டு கொடுப்பதை நிறுத்தி விட்டார். இதுகுறித்து காரணம் கேட்டதற்கு சீட்டு இல்லை எனக்கூறி காலதாமதப்படுத்தி வருகிறார். இவ்வாறு 40 நாட்கள் கடந்து விட்டது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த தண்ணீர் ஊற்று, புதூர், சீதாகுண்டம், வேர்க்காடு, பேய்க்கரும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மீனவ தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்கரையில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். இந்த துறைமுகத்தில் அரியாங்குண்டு, பிள்ளைகுளம், வடகாடு, மாந்தோப்பு போன்ற கிராம மக்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த கடற்கரை ஆழம் குறைவாக உள்ளதுடன், குறுகிய நிலப்பரப்பையும் கொண்டது. இந்த நிலையில் இப்பகுதியில் சிலர் பொழுதுபோக்கு மையம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இங்கு சுற்றுலா தளம் அமையும்பட்சத்தில் இப்பகுதியில் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே இங்கு தனியார் சுற்றுலா மையம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர் யூனியன் தாளியரேந்தல் கிராம மக்கள் சார்பில் அளித்த மனுவில், தாளியரேந்தல் கிராமத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதுகுறித்து யூனியன் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரத்தை அடுத்துள்ள காருகுடி கிராம மக்கள் சார்பில் நாகராஜன், தர்மராஜ் ஆகியோர் அளித்த மனுவில், காருகுடி கிராமத்தில் உள்ள பெரும்பாலான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் அதில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. மேலும் மின் கம்பங்களில் தெருவிளக்குகளும் இல்லாமல் உள்ளது.

    இதேபோல சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் காருகுடி கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. சில நாட்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு பஸ் மட்டும் வந்து செல்கிறது. இதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பெரியபட்டினம் அருகே உள்ள குருத்தமண்குண்டு பகுதியை சேர்ந்த எஸ்தர் என்பவர் அளித்த மனுவில் பெரியபட்டணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலியை தராமல் நாளொன்றுக்கு ரூ.100 தருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு உரிய கூலி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி முருகன் தலைமையில் 13 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 378 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

    பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

    மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், திருமானூர் கொள்ளிடம் கரையோரம் உள்ள சுள்ளங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். தங்களது குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு மாட்டு வண்டி மூலம் கொள்ளிட கரையோரம் மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வந்தோம். ஆனால் தற்போது மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அன்றாட வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தங்களது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் தங்களுக்கு மணல் அள்ளுவதற்கு அதற்குரிய கட்டணத்தை நிர்ணயித்து மணல் அள்ள அனுமதி அளித்து குடும்பத்தை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    ×